பெரம்பலூர்: உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு இன்று பெரம்பலூர் வட்டாச்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று தேசிய பேரிடர் குறைப்பு நாளாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு பேரிடர்களின் போது பொதுமக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் நடந்து கொண்டு, தங்களின் விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றிக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி பெரம்பலூரில் இன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பேரிடர் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், பேரிடர் காலங்களில் விபத்து ஏற்படா வண்ணம் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், அவசர காலங்களில் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்க, என்று கோஷங்களை எழுப்பியவாறு நகரை வளம் வந்தனர். இப்பேரணியானது பெரம்பலூர் வட்டாச்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியே புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது.
அதனை தொடர்ந்து மாவட்ட தீயணைப்புத்துறையின் மூலம் பொதுமக்களிடையே பேரிடர் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பேரிடர் காலங்களில் தீயணைப்பு வீரர்களால் மேற்கொள்ளப்படும், கயிறு மூலம் ஆட்களை மீட்டல், ஏணி மூலம் உயரமான கட்டிடங்களில் இருந்து பத்திரமாக மனிதர்களை எவ்வாறு மீட்பது, மழை காலங்களில் சாலைகளில் விழும் மரங்களை எவ்வாறு அகற்றுவது, மழை காலங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து இரப்பர் படகுகள் மூலமாக எவ்வாறு மக்களை மீட்பது, நில நடுக்கம் போன்ற அசாதாரன சூழ்நிலையில் கட்டிடங்களில் சிக்கியவர்களை காற்று பலூன் மூலம் மீட்ப்பது போன்ற நிகழ்ச்சிகள் தீயனைப்பு வீரர்களால் நேர்த்தியாக செய்து காட்டப்பட்டது.
இதற்கு முன்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பேரிடர் காலங்களில் மனித உயிர் மற்றும் சொத்துக்களை காப்பது, பருவநிலை மாற்றம்குறித்த விழிப்புணர்வு, பேரிடர் குறைப்பு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பெரம்பலூர் சார் ஆட்சியர் ப.மதுசூதன்ரெட்டி பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் வட்டாட்சியர் ஏழுமலை உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.