இது குறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளதாவது:
ஊரகப் பகுதிகளில் நீராதாரமின்றிக் கைவிடப்படும் ஆழ்குழாய்க் கிணறுகள் (அ) திறந்த வெளிக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து விபத்துக்கள் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன்படி புதிதாக கிணறு அமைக்க விரும்பும் நில உரிமையாளர்கள், கிராம ஊராட்சியில் ஊரகப் பகுதிகளில் முன் அனுமதி பெற ரூ.5,000- என்றிருந்ததை ரூ.100-ஆக குறைத்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அதேபோல, ஆழ்துளைக் கிணறு அமைக்கும் நிறுவனங்கள், மாவட்ட ஆட்சியரிடம் ரூ.15,000- செலுத்தி அனுமதி பெற வேண்டும்.
வீட்டு உபயோகத்திற்கு அமைக்கப்படும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு ஊராட்சியில் கட்டணம் மற்றும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. வீட்டு உபயோகம் தவிர விவசாயம், தொழில் சார்ந்த மற்றும் வணிக நோக்கத்திற்காக புதிதாக மற்றும் ஆழப்படுத்தும் ஆழ்குழாய் பணிகளுக்கு ஊராட்சியில் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும்.
ஆழ்துளைக் குழாய் அல்லது கிணறு தோண்டும் போது அல்லது ஆழப்படுத்தும் போது, பணியை மேற்கொள்கின்ற நிறுவனம், விதிகளின் படி முறையான பதிவுச்சான்று பெற்றுள்ளதா என்பதை பொதுமக்கள் என சரிபார்க்க வேண்டும். பணி இடைவெளியின்போதும், பணி நிறுத்தப்பட்ட பின்னரும் அந்தக் கிணறு சரியான முறையில் மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கிணற்றின் வகை, ஆழம் மற்றும் குறுக்களவு, பணி மேற்கொள்பவர் மற்றும் கிணற்றின் உரிமையாளர் பெயர், முகவரி மற்றும் தொடர்பு விவரங்களையும் பணி நடக்கும் இடத்தில் கவனத்தைக் கவரும் வகையில் அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்கப்பட வேண்டும்.
பணி நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் முள்கம்பிவேலி அல்லது தகுந்த தடுப்பு அமைக்கப்பட வேண்டும். பணி இடைவேளையின் போது துளையிடப்பட்ட குழி அல்லது கிணறு சரியான முறையில் மூடப்பட்டிருத்தல் வேண்டும். பணி முடிவுற்ற பின் கிணற்றைச் சுற்றி உள்ள மேடு, பள்ளங்களை நிரப்பி தரைமட்ட முன்பிருந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும். கைவிடப்பட்ட கிணறுகளை களிமண், மணல், சிறு கற்கள் மற்றும் உரிய பிற பொருட்களைக் கொண்டு தரைமட்ட அளவிற்கு நிரப்பிட வேண்டும்.
எனவே ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பொதுமக்கள் உரிய பாதுகாப்புடன் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து, பயன்பாடற்ற கிணறுகளை உரியவாறு மூடி வைத்திட வேண்டும. ஒவ்வொரு கிராம ஊராட்சியும் தங்கள் பகுதியில் உரிய அனுமதியுடன் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படுவதை உறுதி செய்திடும் வகையில் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். ஆழ்துளைக் கிணறு அமைக்கும் நிறுவனங்கள், மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதி பெற்று பணியினை மேற்கொள்கின்றனரா என்பதை கண்காணித்திட வேண்டும்.
மாவட்ட அளவில் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளால் எந்த ஒரு பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்படாத வகையில் அனைவரும் போதிய கவனத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதி செய்து தேவையற்ற இடர்பாடுகளை தவிர்த்திட வேண்டும்,என அவர் தெரிவித்துள்ளார்.