ஊழல் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு அடிப்படையில் தமிழகத்தில் வலிமையான கூட்டணி அமைக்கப்படும் என்றும், ஊழலில் ஈடுபடாத கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் மத்தியில் அமித்ஷா உரையாற்றினார். சொட்டு நீர் பாசனத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியதை பட்டியலிட்ட அவர், 4 ஆண்டுகளில் 5 லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு தரப்பட்டுள்ளது என்றார். ஆட்சியில் இருந்த போது தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என எதிர்க்கட்சியினர் கணக்கு கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். செப்டம்பர், அக்டோபருக்கு பிறகு கூட்டணி பற்றி முடிவெடுப்போம் என்று தெரிவித்த அமித்ஷா, தூய்மையான நல்லாட்சி தருகின்ற வலிமையான கூட்டணி அமைக்கப்படும் என்றார். நரேந்திர மோடி அரசு, சாதி வாதத்தை, ஊழலை, வாரிசு அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் அனைத்து மட்டங்களிலும் ஊழலை ஒழிக்கும் முயற்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஈடுபடவேண்டும் என்றும் அமித்ஷா கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை உள்ளிட் பலர் கலந்து கொண்டனர்.