பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், மக்களவைக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஈரோட்டில் பள்ளி அருகே சாலையில் கண்டெடுத்த 50 ஆயிரம் ரூபாய் பணப் பையை ஆசிரியை மூலம் போலீசிடம் ஒப்படைத்த முகமது யாசின் எனும் சிறுவனை, தமது இல்லத்திற்கு வரவழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்தார். அப்படிப்பட்ட நேர்மையான சிறுவன் தமக்கு ரசிகனாக இருப்பதற்கும், தம்மை சந்திக்க விரும்பியதற்கும் தாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் கூறினார். பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் கல்வி சிறப்பாகவே இருப்பதாகவும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாக செயல்படுவதாகவும் ரஜினிகாந்த் பாராட்டினார்.காந்திய, காமராஜர் வழிக் கொள்கைகள் கொண்ட தமிழருவி மணியன் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைவது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். தமிழகத்தில் ஊழல் என்பது அமித்ஷாவின் கருத்து என அவர் குறிப்பிட்டார். ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என ரஜினி கேட்டுக் கொண்டார்.லோக் ஆயுக்தாவிற்கும் வரவேற்பு தெரிவித்துள்ள ரஜினிகாந்த், தமிழக அரசை எல்லோரும் விமர்சித்துக் கொண்டு தான் இருப்பதாகவும், விமர்சிப்பது எளிது என்றும் தெரிவித்தார். சென்னை – சேலம் 8 வழிச்சாலை குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், வளர்ச்சி, வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் என வரவேற்பு தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் முழுநேர அரசியல் வாதி ஆக வாய்ப்புண்டா என்ற கேள்விக்கு பதிலனித்த ரஜினிகாந்த், அதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்றார். ரஜினி மக்கள் மன்றத்தில் ஒரு கோடி உறுப்பினர்கள் இணைந்துவிட்டதாக வரும் தகவல் பொய் என்றும் ரஜினி விளக்கமளித்தார்.