சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், விடாமுயற்சியும் இருந்தால் போதும் வாழ்க்கையில் நீங்கள் நினைக்கும் இலக்கை எளிதில் அடையளாம் என குரூப் 1 தேர்வு பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பேசினார்.
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று துவக்கப்பட்டது.
50க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்ட இந்த பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பேசிதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப்1, குரூப்2, கிராம நிர்வாக அலுவலர் போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றோம்.
இந்தப்போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு நல்ல முறையில் பயிற்சி பெற்று இதுவரை சுமார் 140க்கும் மேற்பட்டோர் குரூப்1,குரூப்2,குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி வருகின்றார்கள். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கான இந்த புதிய கட்டடத்தை வழங்கியுள்ளார்கள்.
இதுவரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடத்தப்பட்டு வந்த இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் இனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்தான் நடைபெறும்.
தேர்வில் நீங்கள் வெற்றி பெறுவதற்குத்தேவையான பயிற்சிகள் தகுதிவாய்ந்த நபர்களால் உங்களுக்கு வழங்கப்படும்.
என்னதான் நாங்கள் பயிற்சி கொடுத்தாலும் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணமும், விடாமுயற்சியும் இருந்தால், உங்களின் இலக்கை நீங்கள் அடைவதை யாராலும் தடுக்க இயலாது. எத்தனைபேர் இருந்தாலும் அனைவரிடமும் நாம் தனித்து தெரியும் வகையில் சிறப்பு பண்புகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இன்று பயிற்சிக்கு வந்திருக்கும் அனைவரும் தேர்வில் வெற்றிபெற்று அரசு வேலையில் அமரும்போதுதான் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிக்கு முழுவெற்றி கிடைத்ததாக பொருளாகும். எனவே நீங்கள் அனைவரும் விடாமுயற்சியுடன் படித்து வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் லலிதாம்பாள், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மணிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.