பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே, கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பேருந்தை சிறைப் பிடித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்ட அன்னமங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு அரசலூர், விசுவகுடி, முகமதுப்பட்டினம், பிள்ளையர்பாளைம் ஆகிய கிராமங்கள் உப கிராமங்களாக உள்ளன.
முகமதுபட்டினம், விசுவகுடி, பிள்ளையார்பாளையம் கிராமங்களுக்கு அன்னமங்கலத்தில் இருந்து செல்லும் சாலை மிக மோசமானதாக குண்டும் குழியுமாக உள்ளதாக தெரிவித்து, யூனியன் சேர்மன், ஊராட்சித் தலைவர், மற்றும் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் உள்பட அதிகாரிகளிடமும் மனு கொடுத்தனர். அதற்கு எவ்வித நடவடிக்கையும் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் எடுக்காததால் ஆத்திரமடைந்த முஹமதுப்பட்டினம் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு அன்னமங்கலம் – பிள்ளையர்பாளைம் சாலையில் அவ்வழியே வந்த அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலைமறியலில் ஈடுப்படடனர்.
இது குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) செந்தில் குமார் தலைமையில் போலீசார், வேப்பந்தட்டை வட்டாச்சியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர், பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர்.
இதனால் போக்குவரத்து ஒருமணிநேரம் பாதிக்கப்பட்டது. பள்ளி செல்லும் மாணவர்கள் ஒரு மணி நேரம் காலதாமதமாக சென்றனர்.