திருச்சி: திருச்சி அதிமுக எம்.பி., குமார் தன்னுடைய சொத்துக்களை கைப்பற்ற முயற்சி செய்வதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மறைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையின் மனைவி கஸ்தூரி புகார் கொடுத்துள்ளார்.
2011 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவைத் தோற்கடித்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவினால் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆக்கப்பட்டவர் மரியம்பிச்சை.
ஆனால் சில வருடங்களுக்கு முன்பு பெரம்பலூர் அருகே நடந்த சாலை விபத்தில் அவர் இறந்து விட்டார்.
மரியம் பிச்சைக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். இவரது மூன்றாவது மனைவி பெயர் கஸ்தூரி.
அதிமுக எம்.பி., குமார் மீது மரியம் பிச்சையின் மனைவி கஸ்தூரி, புகார் அளித்துள்ளார். தனக்கு சொந்தமான கலையரங்கம் மற்றும் தியேட்டரை குமார் கைப்பற்ற முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளார் கஸ்தூரி.
குமாரின் மிரட்டலின் பேரிலேயே தனது தியேட்டருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். குமாரின் நெருக்கடி காரணமாக தியேட்டருக்கான வருடாந்திர அனுமதி பெற முடியாமல் சிக்கலில் தவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.