சென்னை: எம்.பி.பி.எஸ். , பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப் பட்டது. சென்னை மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் பட்டியல் வெளியிட்டப்பட்டது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டார். மருத்துவக்கல்லூரி இயக்குநர் கீதாலட்சுமி உடன் இருந்தார்.
தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 2,655 இடங்கள் இருக்கின்றன. இதில் தேசிய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் கொடுக்கப்படும்.
மீதமுள்ள 2,257 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும். இந்த இடங்களில் மாணவ–மாணவிகள் சேர 32 ஆயிரத்து 184 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த 11–ந்தேதி வெளியிடப்பட்டது.
இந்த மாதத்துக்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருப்பதால் அனைத்து பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வருகிற 19–ந்தேதி முதல் 25–ந்தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.