பெரம்பலூர் : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் ரூபாய் ஒரு கோடியே 50 இலட்சம் மதிப்பில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் காந்தரூபனிடம் ரூ.1.50 கோடி மதிப்பிலான காசோலையினை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சிக்கு சொந்தமான இடமான திருநகர் பகுதியில் உள்ள இடம் இந்த பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தினை மாவட்ட ஆட்சியர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது, பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தில் கூடைப்பந்து, கைப்பந்து, இறகுப்பந்து, எறிபந்து, கபாடி, டேக்வாண்டோ, கேரம், செஸ், மேசைப்பந்து போன்ற விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது, எனவே அதற்கு தகுந்ததுபோல் கட்டங்களை வடிவமைக்க பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். மேலும், விளையாட்டு அரங்கம் தவிர பார்வையாளர்கள் அமரும் அரங்கம்(காலரி), உடை மாற்றும் அறைகள், கழிப்பறை வசதியுடன் கூடிய வகையில் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது நகராட்சித் தலைவர் சி.ரமேஷ், நகராட்சி ஆணையாளர் முரளி ஆகியோர் உடனிருந்தனர்.