திருப்பூர்: திருப்பூர் அருகே உள்ள தாராபுரம் சின்னபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 50). விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள் (42).

இவர் நேற்று தாராபுரம் ஐந்து முக்கு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குக்கு பெட்ரோல் போடுவதற்காக மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். வெள்ளை சட்டை அணிந்து ரங்கசாமி ஹெல்மெட் போட்டு இருந்தார். பெட்ரோல் போடுவதற்காக மனைவியை இறக்கி விட்டார்.

அப்போது காளிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி முத்துச்சாமி (45) தனது மனைவி பொன்னாத்தாளுடன் மோட்டார் சைக்கிளில் அதே பெட்ரோல் பங்கிற்கு வந்தார். அவரும் வெள்ளை சட்டையும், ஒரே கலர் ஹெல்மெட் மற்றும் ரங்கசாமி வைத்து இருந்த அதே நிறுவனத்தை சேர்ந்த மோட்டார் சைக்கிள் வைத்து இருந்தார்.

பொன்னாத்தாள் கணவரின் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி பழனியம்மாளின் அருகே நின்று கொண்டார். பெட்ரோல் அடித்து விட்டு வந்த ரங்கசாமியின் மோட்டார் சைக்கிளில் முத்துசாமியின் மனைவி பொன்னாத்தாள் அடையாளம் தெரியாமல் ஏறிக் கொண்டார். அதேபோல் முத்துச்சாமியின் மோட்டார் சைக்கிளில் ரங்கசாமியின் மனைவி பழனியம்மாள் ஏறிக் கொண்டார்.

பின்னர் ரங்கசாமி பொள்ளாச்சி ரோட்டில் மேற்கு நோக்கி சின்னபுத்தூருக்கு சென்றார். முத்துச்சாமி தனது மோட்டார் சைக்கிளில் பழனியம்மாளுடன் கரூர் ரோட்டில் கிழக்கு நோக்கி காளிபாளையத்துக்கு சென்றார்.

தாராபுரம் 5–முக்கில் இருந்து சுமார் 4 கி.மீட்டர் தூரம் சென்ற பிறகு ரங்கசாமியின் மனைவி பழனியம்மாளுக்கு தன்னுடன் மோட்டார் சைக்கிளில் வருவது தனது கணவர் ரங்கசாமி தானா? என்று சந்தேகம் எழுந்தது. உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஹெல்மெட்டை கழற்றும்படி கூறினார்.

அப்போது முத்துச்சாமிக்கு தன்னுடன் பேசுவது தனது மனைவியின் குரல் இல்லையே? என்ற சந்தேகம் எழுந்தது. மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருவரும் சரிபார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். கணவனை காணாது பழனியம்மாளும், மனைவியை காணாது முத்துச்சாமியும் பரிதவித்தனர். எங்கே தவறிப் போனார்கள் என்று தெரியாமல் சில நிமிடங்கள் திகைத்து போனார்கள்.

உடனே பழனியம்மாள் தன்னுடன் வந்த முத்துச்சாமியின் செல்போனை வாங்கி தனது கணவர் ரங்கசாமிக்கு போன் செய்தார். மோட்டார் சைக்கிளில் சின்னப்புத்தூர் சென்று கொண்டு இருந்த ரங்கசாமி போனை எடுத்து பேசினார். எதிர்முனையில் மனைவியின் குரல் கேட்டு அதிர்ச்சியடைந்தார். தன்னுடன் மோட்டார் சைக்கிளில் வருவது யார் என்று தெரியாமல் குழம்பிப்போனார்.

இதேபோல் போனில் பேசிய ரங்கசாமியின் குரல் கேட்டு பொன்னாத்தாளும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் பழனியம்மாள் தனது கணவரிடம் நடந்த விவரத்தை கூறி தாராபுரம் டவுன்ஹாலுக்கு வரும்படி கூறினார்.

அதன்படி ரங்கசாமியும், முத்துச்சாமியும் டவுன் ஹாலுக்கு வந்தனர். அங்கு இருவரும் தங்களது மனைவிமார்களை சரியாக அழைத்து சென்றனர்.

ஹெல்மெட் அணிந்து மனைவியை மாற்றி அழைத்து சென்ற சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!