பெரம்பலூர் : ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி செயலாளருக்கு பணிஓய்வு பலன்கள் ரூ.20 லட்சம் வழங்காததால் மண்டல கூட்டுறவு அலுவலகத்தை ஜப்தி செய்ய மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்திரவிட்டது.
பெரம்பலூர் மாவட்டம் காடூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் பிச்சைபிள்ளை. இவர் பணிஓய்வுபெற்றபோது பணிஓய்வு பலன்கள் சம்பளநிலுவை ஆகியவை உள்பட ரூ.11 லட்சத்து 68 ஆயிரத்து 965 கூட்டுறவு துறை அவருக்கு வழங்கவேண்டிஇருந்தது.
ஆனால், கூட்டுறவுத்துறையினர் அவருக்கு உரிய பணிஓய்வு பலன்களை வழங்காமல் காலம் கடத்திவந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட பிச்சைபிள்ளை பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் துணைபதிவாளர் மற்றும் காடூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தனிஅலுவலர் ஆகியோர் மீது 25.7.2008 அன்று வழக்கு தொடர்ந்தார்.
இந்தமனு 2009-ஆம் ஆண்டில் ஏற்கப்பட்டு வழக்கு விசாரணை நடந்துவந்தது. இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோது பிச்சைபிள்ளை 22.6.2012 அன்றுஇறந்துவிட்டார்.
அதனைத்தொடர்ந்து பிச்சைபிள்ளையின் மகன்கள் அமல்ராஜ் (40) மற்றும் முருகானந்தம் (37) ஆகிய இருவரும் இந்த வழக்கை தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிச்சைப்பிள்ளையின் பணிஓய்வு பணப்பயன்களை வட்டியுடன் சேர்த்து ரூ.20 லட்சத்து 60ஆயிரத்து 353-ஐ அவரது வாரிசுகளுக்கு வழங்குமாறு பெரம்பலூர் மண்டல கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளருக்கு 18.7.2014 ல் உத்திரவிட்டது. தொகையை பைசல் செய்திட 3 மாத காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒரு ஆண்டு கடந்தும் பிச்சைபிள்ளையின் வாரிசுகளுக்கு நீதிமன்றம் உத்திரவிட்ட தொகையை கூட்டுறவுத்துறையினர் வழங்காமல் இழுத்தடித்து வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட அமல்ராஜ் மற்றும் முருகானந்தம் ஆகியோர் நீதிமன்ற உத்திரவை நிறைவேற்றும் மனுவை 2015 பிப்ரவரி மாதத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி நந்தகுமார் பிச்சைபிள்ளையின் வாரிசுகளுக்கு வழங்கவேண்டிய பணிஓய்வு பணப்பயன்களை வழங்க மறுத்தமைக்காக பெரம்பலூர் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளரின் கார் ஜீப் வாகனங்கள் அலுவலகத்தில் உள்ள கணினி, ஏ.சி. பீரோ, மேஜை, நாற்காலிகள், மின்விசிறிகள் உள்ளிட்ட 8 விதமான பொருட்களை ஜப்தி செய்யுமாறு உத்திரவிட்டார்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து இன்னும் ஓரிரு தினங்களில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் ஜப்தி செய்யப்பட உள்ளது