பெரம்பலூரில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு வழங்காமல் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வலியறுத்தி கோரிக்கை பேரணியில் ஈடுப்பட்ட அச்சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட அரசு போக்குவரத்து கழக ஓய்வு பென்சனர் நல சங்கம் சார்பில் பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்டில் தொழிலாளர்களுக்கு வழங்காமல் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கை பேரணி சங்க செயலாளர் கந்தசாமி தலைமையில் நடந்தது. இந்த பேரணி பாலக்கரை வழியாக கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. கலெக்டர் தரேஸ் அகமதுவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
அம்மனுவில் கூறியுள்ளதாவது, 1998க்கு முன் ஓய்வு பெற்று ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு ஆயுட்காலம் வரை ஆயிரம் வழங்கியும், பணிகாலத்தில் இறந்த பணியாளரின் மனைவி, ஓய்வூதியர் தன் மனைவியுடன் புற நகர் பஸ்களில் பயனிக்கவும், அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கோர்ட் உத்தரவின்படி 31.8.2010க்கு முன்னர் 15 சதவீத ஓய்வூதிய உயர்வு வழங்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
3 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள பணிக்கொடை, தொகுப்பூதியம், விடுப்பு சம்பளம், ஓய்வு கால சேமநலதிட்ட நிலுவை, ஊதிய ஒப்பந்தபலன் வழங்காதது, ஓய்வூதிய நிலுவை தொகை, அகவிலைப்படி உயர்வு தொகை போன்ற பணப்பலன்கள் வழங்காததால் ஓய்வூதியர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. எனவே ஓய்வூதிய பணப்பலன்களை வழங்கவேண்டும், தற்போதைய ஓய்வூதிய நிதி பொறுப்பாட்சி குழுவை அரசே ஏற்று நடத்தவேண்டும், மருத்துவ திட்டம், வாரிசு வேலை வாய்ப்பினை வழங்கவேண்டும் . இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.