பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தனதுரை (63), எம்.ஏ., பி.எல்., பட்டதாரியான இவர் போஸ்ட்மாஸ்டராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றதைதொடர்ந்து துறைமங்கலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள ஔவையார் தெருவில் வசித்து வருகிறார்.
இவர் அகில இந்திய தபால் தந்தி ஊழியர் நல சங்க துணை தலைவராகவும், சங்கத்தின் சட்ட ஆலோசகராகவும் உள்ளார்.
இவர் பிரம்மதேசம் கிராமத்தில் அம்பேத்கர் சிலை அமைத்தது, அஞ்சல் துறையில் பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகள் 16 பேருக்கு போராடி கருணை அடிப்படையில் அரசு பணி வாங்கிக்கொடுத்தது, பொதுமக்களின் பிரச்சனைகளை அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்தது போன்ற பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது சமூக சேவையை பாராட்டி புதுடெல்லியில் உள்ள ஹியூமன் ரைட்ஸ் புரொடக்ஸன் கோஆப் இன் நேஷனல் எமர்ஜென்ஸி ஆக்ஸன் நெட்ஒர்க் என்ற அமைப்பு அம்பேத்கர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
இந்த விருதை புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்த அமைப்பின் அகில இந்திய தலைவர் டாக்டர் ஜோசப், சந்தனதுரைக்கு வழங்கினார்.
சந்தனதுரை 2009ம் ஆண்டு அகில இந்திய அளவில் சிறந்த போஸ்ட்மாஸ்டர் என்ற விருதும், 2010ல் சென்னை பிரஸ் சார்பில் ஜாம்பவான் என்ற விருதும், பெரம்பலூர் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் சிறந்த சமூக சேவகர் விருதும் வழங்கி கௌரவித்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.