தங்களை கசக்கி பிழியும் ஓலா, யூபெர் நிறுவனங்களை விரட்டிவிட்டு தமிழக அரசு கேப் தொழில் நடத்த வேண்டும் என தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்த அமைப்பின் நிர்வாகிகளான ஜூட் மாத்யூ,அர்சத், வெங்கடேஷ் ஆகியோர் ஓலா போன்ற நிறுவனங்கள் முறையான அங்கீகாரம் பெறாமலே தங்களை கசக்கி பிழிந்து தங்களது வருமானத்தை வழிப்பறி செய்வதாக குற்றம் சாட்டினார். ஓலா செயலிக்கு உரிய தணிக்கை இல்லை என்பதால் தங்களின் பணம் தினமும் பல்வேறு முறைகளில் பறிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். இந்த நிறுவனங்களின் சேர் பயண முறையினால்தான் அரசு போக்குவரத்து கழகத்துக்கு இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாகவும் வருகிற அக்டோபர் 2-ந்தேதி முதல் சேர் முறையிலான பயண சேவையை தாங்கள் நிறுத்த போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் எந்தவித அங்கீகாரமும் பெறாத இந்த நிறுவனங்களுக்கு பதிலாக அம்மா கால் டாக்சி என்ற திட்டத்தை தொடங்கி அரசு அதன்மூலம் பல்லாயிரம் கோடி வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் ஆவர்கள் ஆலோசனை வழங்கினர். மேலும் அண்டை மாநிலங்களில் வாடகை கார் ஓட்டுபவர்களிடம் வசூலிக்கும் தொகையை விட மிக குறைவாக சென்னையில் வசூலிக்கப்படுவதால் கர்நாடக மாநில கால்டாக்சிகள் இங்கு அதிக அளவில் இயங்குவதாகவும் , தாங்கள் பெங்களூர் சென்றால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் வருத்தம் தெரிவித்தனர். தங்களது கோரிக்கை ஏற்காத பட்சத்தில் போராட்டங்கள் தொடரும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.