பெரம்பலூர் : பெரம்பலூர் நகராட்சியில் கடந்த திமுக ஆட்சியில் ரூ. 60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகனமேடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டு பணி இன்று துவங்கியது.
பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் கடந்த திமுக ஆட்சியில் 2008 ஆம் ஆண்டில், 40 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் துவக்கப்பட்டு, பின்னர் அதிமுக ஆட்சியில் கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் என மொத்தம் ரூ.20 லட்சம் செலவில் கூடுதலாக சேர்த்து ரூ. 60 லட்சம் மதீப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு தகன மேடையை நகராட்சி நிர்வாகம் ரோட்டரி கிளப் பராமரித்து பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், பெரம்பலூர் அருகே உள்ள ஒதியம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத முதியர் ஒருவர் இறந்துகிடந்தார். இவரின் உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ரோட்டரிகிளப் சார்பில் இன்று எரிவாயு தகன மேடையில் முதன் முதலாக உடல் எரிக்கப்பட்டது.
முன்னதாக இறந்தவரின் உடலுக்கு நகராட்சி தலைவர் ரமேஷ், ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார், ஊர்க்காவல் படை மண்டல தளபதி அரவிந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியின்போது நகராட்சி ஆணையர் முரளி,பொறியாளர் ராதா, ரோட்டரி கிளப் நிர்வாகிகள் ரமேஷ், அம்பிகிருஷ்ணன்,வழக்கறிஞர் பாபு, நடராஜன், ரவி, விஜயபாஸ்கர், கோபி, முன்னாள் லயன்ஸ் கிளப் தலைவர் முத்துக்குமார், சுவாமிஎலக்ட்ரிக்கல்ஸ் நல்லுசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.
பின்னர் இது குறித்து ஊர்க்காவல்படை மண்டல தளபதி அரவிந்தன் கூறுகையில்,ரோட்டரி கிளப் சார்பில் எரிவாயு தகன மேடை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு இறந்தவரின் வாக்காளர் அடையாள அட்டை, குடும்பஅட்டை, போட்டோ மற்றும் மருத்துவர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய இறப்பு சான்று எரிப்பதற்கான கூலிதொகை ரூ. 1500 ஆகியவை கொண்டுவரவேண்டும். மேலும் தகவலுக்கு 8754226212 என்ற செல் நம்பரை தொடர்பு கொள்ளலாம் பயன்பெறலாம் என தெரிவித்தார்.
இந்த ஆயிரத்து 500 ரூபாயில், 100 நகராட்சிக்கும், மீதம் 1400 ரூபாய் ரோட்டரி சங்க பராமரிப்பு செலவிற்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்து.