Shoot the killers of the party dignitaries: Controversy by the Kumaraswamy CM Of Karnataka
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த பிரமுகரைக் கொலை செய்த குற்றவாளிகளை சுட்டுக்கொல்ல வேண்டும் என முதல்வர் குமாரசாமி பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அண்மையில் கர்நாடக மாநிலத்தில் ஆளும் ம.ஜ.த. கட்சி பிரமுகர் ஹெச். பிரகாஷ் கொலைப்பட்டார். மாண்டியா மாவட்டத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த இவர் கொல்லப்பட்டது பற்றி பேசியுள்ள முதல்வர் குமாரசாமி, கொலை செய்தவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லுங்கள் எனக் கூறியிருக்கிறார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பிரகாஷ் கொல்லப்பட்டது குறித்து அறிந்த முதல்வர் குமாரசாமி மொபைலில் யாரிடோமா பேசியுள்ளார். அப்போது, பிரகாஷ் நல்ல மனிதர். அவரை ஏன் கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை. கொலையாளிகளுக்கு கொஞ்சம்கூட ஈவு இரக்கம் காட்டாதீர்கள். கண்ட இடத்தில் சுட்டுக்கொல்லுங்கள். எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியிருக்கிறார் என தகவல் பரவி வருகிறது. குமாரசாமியின் பேச்சை ஒரு பத்திரிகையாளர் வீடியோவாக பதிவு செய்து அது கர்நாடக தொலைக்காட்சி சேனலிலும் ஒலிபரப்பாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து குமாரசாமி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். குற்றவாளிகளை சுட்டுக்கொல்லச் சொல்லவில்லை. கட்சித் தொண்டர் கொல்லப்பட்டதால் உணர்ச்சிவசப்பட்டு பேசினேன் என்றும் “குற்றவாளிகள் ஜாமீன் வந்து பிரகாஷை கொலை செய்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறினேன் என்றும் தெரிவித்துள்ளார்.