பெரம்பலூர் : நிலுவை தொகை வழங்கக்கோரி அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் எறையூரில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 162 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சர்க்கரை ஆலைக்கு 2014-2015ம் ஆண்டு அரவை பருவத்துக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை 32 கோடியே 25 லட்சம் ரூபாயை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.
2014-2015ம் ஆண்டு அரவை பருவத்துக்கு எறையூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பும் விவசாயிகளுக்கு கரும்புக்குரிய தொகை வழங்கிட முன் பணமாக தமிழக அரசு 40 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
எறையூர் சர்க்கரை ஆலையில் இணை மின் உற்பத்தி திட்டம், ஆலையை நவீனப்படுத்திடும் திட்ட வேலையை துரிதப்படுத்தி 2015-2016ம் ஆண்டு அரவை பருவத்துக்குள் திட்டத்தை செயல்பாட்டுக்கு தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பெரம்பலுõர் மாவட்டம் எறையூர் சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலுக்கு கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் வேணுகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் அனைத்து விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சீனிவாசன், ராமலிங்கம், சையத்காசிம், மாணிக்கம், விஸ்வநாதன், ராஜீ ஆகியோர் உட்பட மறியலில் ஈடுபட்ட 162 விவசாயிகளை மங்கலமேடு போலீஸார் கைது செய்தனர்.