பெரம்பலூர்: தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருதராஜா (பெரம்பலூர்), சந்திரகாசி (சிதம்பரம்)ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது துவங்கி வைத்தார்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் செய்திமக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியம் இணைந்து ஏற்பாடு செய்த அண்ணல் மகாத்மா காந்தியடிகள் அவர்களின் பிறந்தநாள்விழா மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை விழாவில் அண்ணல் மகாத்மா காந்தியடிகள் அவர்களின் திருவுருவப்படத்தினை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
அண்ணல் மகாத்மா காந்தியடிகள் அவர்கள் நாட்டில் நெசவாளர்கள் நிலை மேம்பட கதராடை அணிந்து, பொதுமக்களையும் கதராடை அணிந்து கொள்ள வைத்தார். அவரது பிறந்த தினத்தை போற்றும் வகையில் அனைவரும் கதராடை வாங்கி அணிவது அவருக்கு செலுத்தும் மரியாதையாகும்.
கதர் திட்டத்தின் மூலம் கிராமங்களில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நூல் நூற்றல் மற்றும் நெசவு நெய்தல் மூலம் பயன்பெறுகின்றனர். இதற்காக தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் ஏற்படுத்தப்பட்டு கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
கதர் கிராமத் தொழில் வாரியம் மூலம் தரமான பொருட்கள் உற்பத்தி செய்யபட்டு வருகிறது. மேலும் தேனீ வளர்த்தல், சோப்பு தயாரித்தல், கைமுறை காகிதம் தயாரித்தல், காலணிகள் தயாரித்தல், மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில்கள் நடைபெற்று வருகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் காதிகிராப்ட் கதர் விற்பனை நிலையத்தில் தரமான கதர், கதர் பாலியஸ்டர், அசல் வெள்ளி ஜரிகையினால் ஆன பட்டு துணிவகைகள், உல்லன் துணிவகைகள், சுத்தமான இலவம் பஞ்சினாலான மெத்தை தலையணைகள் மற்றும் போர்வைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த விற்பனை நிலையத்தின் மூலம் சென்ற ஆண்டு தீபாவளிக்கு ரூ.9.40 இலட்சத்திற்கு கதர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.30 லட்சம் கதர் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு விற்பனைக்காக கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பத்து மாத சுலப தவணைகளில் திருப்பி செலுத்தும் வகையில் கடன் முறையில விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை பொதுமக்களும், அரசு அலுவலர்களும் பயன்படுத்தி தங்களுக்கு தேவையான துணிவகைகள் வாங்கி பயன்பெற்று, கதர் பொருட்களை உற்பத்தி செய்யும் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைத்திட உதவிடவேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாவேந்தன், நகராட்சி தலைவர் ரமேஷ், நகராட்சி ஆணையர் முரளி, குரும்பலூர் பேரூராட்சித் தலைவர் ந.பாப்பம்மாள், பெரம்பலூர் வட்டாட்சியர் செல்வராஜ், காதி கிராப்ட் மேலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.