சென்னை: சின்ன வெங்காயம் கிலோ 80 ரூபாய், பெரிய வெங்காயம் கிலோ 40 ரூபாய், தக்காளி கிலோ 30 ரூபாய், ஒரு காலிப்ளவர் விலை 70 ரூபாய், ஆப்பிள் கிலோ 200 ரூபாய் என சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் விலை உயர்ந்துள்ளன.
சென்னையில் மொத்த காய்கறிகள் விற்பனை செய்யும் கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. விளைச்சல் குறைந்து போனதே காய்கறிகள் விலை உயர்வுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கிருஷ்ணகிரி, தலைவாசல், ஒட்டன்சத்திரம், பெரியபாளையம், திருவண்ணாமலை, ஓசூர் பகுதியில் இருந்து அதிக அளவில் காய்கறி வரும்.
ஆனால் கடந்த சில நாட்களாக போதிய விளைச்சல் இல்லாததால் காய்கறி வரத்து குறைந்து விட்டது.
தமிழகத்தில் காய்கறிகளின் விளைச்சல் குறைந்து போனதால், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து காய்கறிகள் சென்னை கோயம்பேடு சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. இதனால் காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனைத்து காய்கறிகளின் விலையும் ரூ.30க்குள் விற்கப்பட்டது. ஆனால் இப்போது விலை கிடுகிடு என உயர்ந்து விட்டது. சின்னவெங்காயம் கிலோ 70 முதல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு காலிப்ளவர் விலை ரூ.70 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ரூ.30க்கு விற்கப்பட்ட அவரைக்காய் விலை தற்போது ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரட், பீன்ஸ், இஞ்சியின் விலையும் விண்ணை முட்டும் விதமாக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதேபோல் பழங்கள் விலையும் உயர்ந்துள்ளது. ஆப்பிள் பழம் கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்கப்படுகிறது. ஆரஞ்சு பழம் கிலோ ரூ.80க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.40க்கும் விற்கப்படுகிறது.
செவ்வாழை 1 பழம் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கிறார்கள். கொய்யாபழம் கிலோ ரூ.20க்கு விற்கப்படுகிறது. பருவத்தில் மழை சரிவர பெய்யாததால் விளைச்சல் பாதிக்கப்பட்டு அதனால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.