பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிபாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளாத காவல் துறையை கண்டித்து, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று மதியம் முற்றுகையிட்டனர்.
கடந்த 3 ஆண்டுகளாக கோனேரிபாளையம் கிராமத்தை சேர்ந்த சில நபர்கள், வெளியூரை சேர்ந்த சிலருடன் சேர்ந்து கொண்டு கோனேரிபாளையம் கிராமத்தில் சாதி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருவதாகவும்,. மேலும், வழிப்பறி மற்றும் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்வது உள்ளிட்ட செயல்களில் அவர்கள் ஈடுபடுவதால், கிராமத்தின் அமைதி சீர்குலைவதுடன், சாதிக் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் பெரம்பலூர் காவல் துறையினரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்நிலையில், நேற்று இரவு அதே கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் வீட்டுக்கு சென்றபோது, சில இளைஞர்களை அந்த மணவியை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து, அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் அந்த இளைஞர்ளிடம் கேட்டதற்கு அவர்களிடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த, அந்த இளைஞர்கள் மாணவியின் வீட்டுக்கு சென்று பொருள்களை சேதப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர்.
இதையறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் ஞனசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, வழக்குரைஞர்கள் பி. காமராஜ், அருள், இளங்கோவன் தலைமையில், அந்த கிராமத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர் சார் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.