பெரம்பலூர் : பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு , காவல் துறையினரைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று புதன்கிழமை ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் தேவராஜன் மீது நிலப்பிரச்னை தொடர்பாகவும், வழக்கறிஞர்கள் இளங்கோவன், அண்ணாதுரை ஆகியோர் மீது பெண் காவலரிடம் தகராறு செய்ததாகவும் பொய் வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் காவல் நிலையத்தை கண்டித்தும்,
காவல் நிலையத்துக்கு செல்லும் வழக்கறிஞர்களை தரக்குறைவாக, தகாத வார்த்தையில் பேசி, அவர்களை தாக்கி கொடுமைப்படுத்திய பெரம்பலூர் போலீஸார் மீது வழக்குப் பதிந்து, உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும்,
கடந்த 17 ஆம் தேதி முதல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் இ. வள்ளுவன்நம்பி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.