பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கறிக்கோழிப் பண்ணைகள் அபிவிருத்தி திட்டமானது 2012 – ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது 2015-16ம் ஆண்டில் 50 கறிக்கோழி பண்ணைகள் பெரம்பலூர் மாவட்டத்தில் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 5000 கோழிகள் (1-யூனிட்) கொண்ட கோழி பண்ணைகள் அமைக்க தமிழக அரசின் நிதியிலிருந்து 25 சதவீதம் மான்யமாக ஒரு பயனாளிக்கு 2 இலட்சத்து 68 ஆயிரத்து 750 ரூபாயும், மத்திய அரசின் நபார்டு நிதியிலிருந்து 25 சதவீதம் மான்யமாக 2 இலட்சத்து 68 ஆயிரத்து 750 ரூபாயும் சேர்த்து. 5 இலட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் மான்யமாக வழங்கப்படுகிறது.
5000 கோழிகள் கொண்ட பண்ணையமைக்க திட்ட மதிப்பீடு ரூ.10.75 இலட்சமாகும்.
இத்திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு பண்ணை அமைப்பதற்குரிய இடம் தன்னுடைய பெயரில் இருக்க வேண்டும் மேலும் அந்த இடத்தில் எந்தவித சட்ட சிக்கலும் இருக்க கூடாது.
கொட்டகை கிழக்கு மேற்கில் கட்டப்படும் விதத்தில் நிலம் இருப்பதோடு கோழி பண்ணை அமைக்கப்படும் இடம் கிராமத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் இருக்க வேண்டும். மேலும் நிலத்தில் நீர் ஆய்வு செய்து கோழிகள் குடிக்கும் அளவிற்கு தரமானது என்ற சான்று பெறப்பட வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள பெரம்பலூர் மாவட்ட விவசாய குடிமக்கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.