தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் இதுபோன்ற அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானோர் அரசுப்பணிகளுக்கு தேர்வாகி பணியாற்றிவருகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பெருமளவில் வெற்றிப்பெற்றிட வேண்டும் என்ற நோக்கத்தில் தகுதி வாய்ந்த பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்பட்ட முந்தய தேர்வுகளில் வெற்றிப்பெற்ற அரசு அலுவலர்களை கொண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்ட்டு வருகின்றன.
இந்தப்பயிற்சி வகுப்பிற்கு இன்று சென்ற மாவட்ட ஆட்சியர் அங்குள்ள மாணவ,மாணவிகளிடம் பேசியதாவது:
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ள இந்த வாய்ப்பை நீங்கள் முறையாகப் பயன்படுத்தி தேர்வில் வெற்றிபெற வேண்டும். இங்கு வழங்கப்படும் பயிற்சிகளை அன்றாடம் மீண்டும் மீண்டும் படித்து, ஒருவருக்கொருவர் கருத்துக்களை பறிமாறிக்கொள்ள வேண்டும். தனக்கு தெரிந்த தகவல்களை மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்வதால் அனைவரும் பல்வேறு தகவல்களை தினந்தோறும் கற்கமுடியும். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியுமே வெற்றிக்கு வழிவகுக்கும் எனவே, நீங்கள் அனைவரும் தன்னம்பிக்கையை இழக்காமல், விடாமுயற்சியுடன் பயிற்சி செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்ட இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் மூலமாக இதுவரை 230 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று அரசுத்துறையின் பல்வேறு நிலைகளில் தற்சமயம் பணியாற்றி வருகின்றனர். இதில் 18 கிராம நிர்வாக அலுவலர்களும் அடங்குவர். இதைப்போன்று நீங்களும் வெற்றிபெற வேண்டுமென்று அனைவரையும் வாழ்த்துகின்றேன், என பேசினார். அப்போது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் லலிதாம்பாள், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மணிவேல், வட்டாட்சியர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.