பெரம்பலூர் : மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்காலமிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட குன்னம் அருகே உள்ள புதுவேட்டக்குடி கிராமத்தில் கடந்த 28ந்தேதி முதல் மௌன தினமாக அனுசரிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இன்று அவரது உடல் இராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்ட நேரத்தில் புதுவேட்டக்குடி பகுதியிலுள்ள மக்கள் பிரதிநிதிகள், பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள், வியாபாரிகள் உட்பட பலர் பங்கேற்ற அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
புதுவேட்டக்குடி பஸ் நிறுத்தத்தில் தொடங்கிய இந்த அமைதிப்பேரணியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அப்துல்கலாமின் படத்தை மாணவ, மாணவியர்கள் கைகளில் ஏந்தியபடி வேப்பூர் ரோடு, தெற்குத்தெரு, பிள்ளையார் கோவில் தெரு வழியாக கிராமத்தின் முக்கிய விதிகளின் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வந்தடைந்து அப்துல்கலாமின் படத்தின் முன் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி
மரியாதை செய்தனர்.
இந்த அமைதி ஊர்வலத் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் தலைமையில் சமூக ஆர்வலர்கள் நடராஜன், செந்தில், பரமானந்தம், கதிர்வேல், காமராஜ், சேகர், சரத், சதீஷ், சின்னதுரை, வெற்றி மற்றும் ஊர்காவல் படை கமாண்டர் துரைபாண்டியன் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் உதவியுடன் செய்திருந்தனர்.