பெரம்பலூர்: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ம் நாள் தன்னார்வ இரத்ததான தினமாக அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, குருதி கொடையை ஊக்குவிக்கும் பொருட்டும், மக்களிடையே குருதி கொடையின் அவசியத்தை கொண்டு சேர்க்கும் வகையிலும், பல்வேறு வகையான விழிப்புணர்வு பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இதன் மூலம் குருதி கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள குருதி வங்கியில் இரத்ததானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, குருதி கொடையின் அவசியத்தை மக்களிடையே கொண்டு செல்லும் முகாம் ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் பொருட்டும், மேலும் புதிய இரத்த கொடையாளர்களை உருவாக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களைச்சார்ந்த குருதி கொடை முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கி பாராட்டினார்.
இந்த முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாக கடந்த 2014 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதிலும் சுமார் 45 இரத்தான முகாம்கள் நடத்தப்பட்டு, சுமார் 3 ஆயிரம் யூனிட் அளவிலான இரத்தம் கொடையாக பெறப்பட்டுள்ளது. கொடையாக பெறப்படும் இரத்தம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, இரத்தம் தேவைப்படும் நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.
“இந்த பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களைவ விட குருதி கொடை வழங்கிய மற்றும் குருதி கொடை முகாமகள் நடத்திய உங்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்” என்று மாவட்ட ஆட்சியர் குருதி கொடையாளர்கள் மற்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள், வட்டார மருத்துவ அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497