பெரம்பலூர்: கேபிள் டி.வி இணைப்புக்கான முன் வைப்புத் தொகையை தர மறுத்த ஆப்ரேட்டரை கைது செய்ய பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம் புதன்கிழமை இன்று உத்தரவிட்டது.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள வானதிரையான் பட்டிணத்தை சேர்ந்தவர் கே. தங்கவேலு.
கூட்டுறவுத்துறை தணிக்கை அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், ஜெயங்கொண்டத்தில் விருத்தாசலம் சாலையில் கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தி வரும் நூரல் அமானுவிடம் முன் வைப்புத் தொகையைக ரூ. 500 செலுத்தி கேபிள் டி.வி இணைப்பு பெற்றாராம். மாத சந்தா தொகையாக ரூ. 120 செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், 9.5.2012 ஆம் தேதிக்கு முன் மாதத்திற்குரிய சந்தா தொகையை செலுத்தவில்லை எனக்கூறி, தங்கவேலு வீட்டுககான கேபிள் டி.வி. இணைப்பை நூரல் அமான் துண்டித்துள்ளார்.
மேலும், ஓராண்டுக்கு மேலாகியும் முன் வைப்பு தொகையை தங்கவேலுக்கு திரும்ப தரவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட தங்கவேலு, பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நூரல் அமான் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கேபிள் இணைப்புக்கான முன் வைப்பு தொகை ரூ. 500-ஐ 20.10.2005 தேதியிலிருந்து இதுவரை ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் சேர்த்து தங்கவேலுவிடம் வழங்க வேண்டும்.
இந்த வழக்கிற்கான செலவுத் தொகையாக ரூ. 3 ஆயிரமும் வழங்க வேண்டும் என கடந்த 6.3.2015 ஆம் தேதி உத்திரவிட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவை நூரல் அமான் செயல்படுத்தாததால், நீதிமன்ற உத்திரவை நிறைவேற்றக் கோரி தங்கவேல் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கலியமூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறிய நூரல் அமானை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஜெயங்கொண்டம் காவல் நிலைய ஆய்வாளருக்கு புதன்கிழமை இன்று உத்திரவிட்டனர்.