கை.களத்தூரில் கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணம் கொள்ளை ! மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலை வீச்சு !!
பெரம்பலூர் மாவட்டம்இ வேப்பந்தட்டை வட்டம் கை.களத்தூரில் கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூரில் நல்லதங்காள் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தக் கோவிலில் துரைசாமி என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு கோவிலை துரைசாமி பூட்டி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார். நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலின் முன்புற கேட்டில் பூட்டியிருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை தூக்கி சென்று அருகிலிருந்த சோளக்காட்டில் வைத்து உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் முழுவதையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கும்பாபிஷேகம் நடந்ததிலிருந்து உண்டியல் திறக்கப்படாததால் அதில் ரூ.50 ஆயிரம் பணம் இருந்திருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை கோவிலுக்கு சென்ற துரைசாமி பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக்கண்டு திடுக்கிட்டார். பின்னர் அவர் ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமாருக்கு தகவல் கொடுத்தார். இதனைதொடர்ந்து சிவக்குமார் கை.களத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.