பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் அருகே சேலம் மாவட்டத்தை சேர்ந்த நெல் அறுவடை இயந்திர டிரைவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே உள்ள வெள்ளையூரை சேர்ந்தவர் ராமசாமி மகன் ராஜசேகர் (வயது22). நெல் அறுவடை இயந்திரத்தின் டிரைவராக பணியாற்றி னார். இந்நிலையில் கடந்த மாதம் 25 ந்தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற ராஜசேகர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து ராஜசேகரின் தந்தை ராமசாமி வீரகனூர் போலீசில் தனது மகனை காணவில்லை என புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் அருகே உள்ள பில்லாங்குளம் ஏரிக்கு செல்லும் வாய்க்காலில் அழுகிய நிலையில் பிணம் கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கை.ககளத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து வனப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது ராஜசேகர் என்பதை அவரது உறவினர்களை கொண்டு உறுதிபடுத்தினர். பின்னர் ராஜசேகரின் உடலை பிரேத விசாரணைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்கு பதிவு செய்து ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து வாய்க்காலில் வீசி சென்றுள்ளனரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.