பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் கோயில் பூசாரி வீட்டின் சுவரை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருகள் திருடப்பட்டது இன்று தெரியவந்தது.
ஆலத்தூர் வட்டம் நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் பூசாரியாக உள்ளவர் நாராயணன் (47). அந்தக் கோயிலில் அருகேயுள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது மனைவி கோமதி குழந்தைகளுடன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டாராம். இந்நிலையில், நாராயணனும் நேற்று இரவு வெளியே சென்றுவிட்டார்.
இன்று காலையில் நாராயணன் தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ஓட்டு வீட்டின் பின்புற சுவரை உடைத்து வீட்டிலிருந்த 8 பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் ரொக்கம், கால் கிலோ வெள்ளிப் பொருள்கள் என ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச்சென்றது தெரியவந்தது.
தகவலறிந்த பாடாலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து நாராயணன் அளித்த புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.