தீ விபத்தில் எரிந்து போன கோழிகள்.
பெரம்பலூர் : ஆலத்தூர் அருகே கோழிப்பண்ணையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பில் 2,300 கோழிகள் எரிந்து நாசமானது.
ஆலத்தூர் அருகேயுள்ள இரூர் பிரதான சாலைப்பகுதியை சேர்ந்தவர் மூக்கன் மகன் ரவிச்சந்திரன் (45). இவர், அப்பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை கோழிப்பண்ணையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இதில், பண்ணையிலிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 2,300 கோழிகள் எரிந்து நாசமானது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், பாடாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்புலட்சுமி வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்