பெரம்பலூர் : பெரம்பலூர் கடைவீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது இன்று (18.9.2015) துவக்கி வைத்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர் சங்கங்களின் தாய் சங்கமாக திகழ்வதே கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம். முக்கிய குறிக்கோள்களான தமிழக கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கவும், அவர்கள் உற்பத்தி செய்யும் துணி இரகங்களை விற்பனை செய்யவும் 1935ல் துவங்கப்பட்ட நிறுவனம்தான் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம்.
பெரம்பலூர் கோ-ஆப்டெக்ஸில் 2014-2015 ஆம் ஆண்டிற்கான விற்பனை ரூ.81.94 லட்சமாகும், கடந்த ஆண்டில் தீபாவளி விற்பனை 39.89 லட்சமாகும். 2015-16ஆம் ஆண்டிற்கான விற்பனை இலக்கீடு ரூ.1கோடியே15 லட்சமாகும். நடப்பாண்டில் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கீடு ரூ.55 லட்சமாகும்.
சுங்கடிச் சேலைகள், ஆரணி கோவில் வடிவ பார்டர் (Temple border) சேலைகள், குறைந்த விலை பட்டு சேலைகள், செட்டிநாடு சேலைகள், கூறைநாட்டு சேலைகள, காஞ்சி காட்டன் சேலைகள், லினென் (linen) ரெடிமேட் சட்டைகள் ஆகியன தீபாவளிக்கு கோ-ஆப் டெக்ஸில் வரப்பெற்றுள்ள புதிய ரகங்களாகும்.
கோவை மென்பட்டு சேலைகள், உறையூர் ஜெயங்கொண்டம் பருத்தி சேலைகள், அச்சிட்ட பருத்தி சேலைகள், சேலம் பாலியஸ்டர் சேலைகள் என இன்னும் ஏராளமான இரங்கள் தீபாவளி விற்பனைக்கு தயாராக உள்ளது.
சிறப்பு பரிசு விற்பனை திட்டம் அறிவிப்பு
தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி 15.09.2015 முதல் 14.11.2015 வரை வழங்கப்படும்.
கோ-ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்திய கனவு-நனவு திட்டம் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் ரூ. 100 முதல் ரூ.1,000 வரை 9 மாதங்கள் செலுத்தி வந்தால் 10-வது மாத தவணையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்துவதுடன் 10-வது மாத முடிவில் அவர;கள் சேமிப்புடன் 58 சதவீத அளவிற்கு கூடுதலாக கைத்தறி மற்றும் பட்டு ரகங்களை வாங்கிக் கொள்ளலாம்.
வெகுமதி
இத்திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்கள் செலுத்தும் முதல் தவணையில் 25 விழுக்காடு மதிப்பிற்குரிய துணிகளை அறிமுக வெகுமதியாக கோ-ஆப்டெக்ஸ் வழங்குகிறது. இத்திட்டத்தில் இதுவரை தஞ்சாவூர; மண்டலத்தில் மட்டும் 5,500 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சேர்ந்து பயனடைந்து வருகிறார்கள்.
மேலும், கோ-ஆப்டெக்ஸின் புதிய திட்டமாக பரிசுக் கூப்பன் திட்டம் 2013-14 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு, அத்திட்டத்தின் கீழ் திருமணம் மற்றும் இதர சுப வைபவங்களுக்கு வாடிக்கையாளர்கள் அவர்தம் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கைத்தறி இரகங்களை பரிசாக வழங்கும் உன்னதமான வாடிக்கையாளர் பரிசு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அரசு தள்ளுபடியும் வழங்கப்படும்.
தங்க காசு பரிசு திட்டம்:
தற்போது வாடிக்கையாளர்களுக்கு தங்க மழைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ரூ. 2000 க்கு மேல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் 110 நபர்களுக்கு தலா 4 கிராம் தங்கம் மற்றும் 330 நபர்களுக்கு தலா 2 கிராம் தங்கம் வழங்கப்பட உள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், உள்ளாட்சித் துறை பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் ஆகியோருக்கு கோ-ஆப்டெக்ஸ் வட்டியில்லா சுலப கடன் வசதி அளிக்கிறது. எனவே, கைத்தறி நெகவாளர்களின் வாழ்க்கைகு உதவும் வகையில் கோ-ஆப்டெக்ஸ் ஆடைகளை அணிந்து மகிழ வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன், என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தொடக்க கல்வி அலுவலர் எலிசபெத், கோ-ஆப்டெக்ஸின் தஞ்சாவூர் மண்டல நிர்வாக குழு உறுப்பினர்கள் என்.மாதேஸ்வரன், சு. இராஜலட்சுமி, ம.சண்முகசுந்தரம், மண்டல மேலாளர்கள் ஆர்.சீனிவாசன், வெ.செல்லையா, ஆ.யு.பாலகிருஷ்ணன், யு.சங்கர் மற்றும் பொதுமக்கள் பலர் கொண்டனர்.