தேர்தல் செலவினங்களை கண்கானிக்கும் கணக்கு குழு, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்கானிப்பு குழு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான பொது பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்காக இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு தேர்தல் பொது பார்வையாளராக என்.விஷ்ணு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்திட இந்திய தேர்தல் ஆணையத்தால் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரங்களை கண்காணித்து வருகின்றது.
அதன்படி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் பிரச்சாரத்திற்காக உள்ளூர் கேபிள் தொலைக் காட்சிகள் மற்றும் செய்திதாள்களில் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் மற்றும் செய்திகள் ஏதேனும் வெளியிடப்படுகிறதா என்பது குறித்து கண்காணிப்பதற்காகவும், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்கானிப்பு குழுவிடம் அனுமதி பெற்று உள்ளூர் தொலைக் காட்சிகளில் ஒளிப்பரப்பிட ஏதுவாக 24 மணி நேரமும் இயங்கும் வகையில் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்கானிப்பு குழு செயல்பட்டு வருகின்றது.
இக்குழுவின் மூலமாக செய்திதாள்களில் வெளிவரும் அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரச்சார விளம்பரங்களை கண்கானித்து அவற்றை வேட்பாளரின் தேர்தல் செலவினத்தில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருவது குறித்தும், அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்தும், கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார்கள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் சட்டமன்ற தேர்தலுக்கான பொது பார்வையாளர் விஷ்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், தேர்தல் பிரச்சாரத்திற்கு வேட்பாளர்களால் ரூ.28 இலட்சங்கள் வரை செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கணக்கிடுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் செலவினங்களை கண்கானிக்கும் கணக்கு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பாக பல்வேறு குழுக்கள் அளிக்கும் அறிக்கையின் படியும், நேரடியாக சென்று ஆய்வு நடத்தப்படுவதன் அடிப்படையிலும் தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பான செலவினங்களை, வேட்பாளர்களின் பெயர்களில் வரவு வைத்து, வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் கணக்கிடப்பட்டு வருவதையும், தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இயங்கிவரும் பறக்கும் படை மற்றும் தீவிர கண்கானிப்பு குழுக்களின் செயல்பாடுகளை ஜி.பி.எஸ் கருவி மூலம் கண்கானிக்கும் முறைகளையும், சட்டமன்ற தேர்தலுக்கான பொது பார்வையாளர் பார்வையிட்டார்.
இம்மையங்களின் செயல்பாடுகளை பார்வையிட்ட சட்டமன்ற தேர்தலுக்கான பொது பார்வையாளர் விஷ்ணு தேர்தலை நேர்மையாக நடத்திட ஏதுவாக எவ்வித பாரபட்சமுமின்றி செயலாற்றிட அலுவலர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி,உள்ளிட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.