சமூக பொருளாதாரம் மற்றும் சாதி கணக்கெடுப்பு 2011 வரைவு பட்டியல்களை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் (பொ) மீனாட்சி வெளியிட , திட்ட அலுவலர் (பொ) மலர்விழி பெற்றுக்கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக பொருளாதாரம் மற்றும் சாதி கணக்கெடுப்பு 2011 தொடர்பான பணிகள் முடிவுற்றதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு பட்டியல்கள் 27.04.2015 அன்று ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் வெளியிடப்பட்டு திருத்தங்கள், மாற்றங்கள் மற்றும் விடுபட்ட குடும்பங்கள் சேர்த்தல் தொடர்பாக பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் பெறப்பட்டு, உரிய அலுவலர்களால் தல ஆய்வு மற்றும் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு தீர்வு செய்யப்பட்ட பின்னர், அவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட திருந்திய வரைவு பட்டியல்கள் அச்சிடப்பட்டு, அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் பொது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன.
பொது மக்கள் வரைவு பட்டியல்களை பார்வையிட்டு கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் இருப்பின் வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட 7 தினங்களுக்குள், அதாவது 22.07.2015-ந்தேதிக்குள், மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கோபு உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.