மங்கலமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள்.
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு அருகே ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை விளையாடிக்கொண்டிருந்த பள்ளி மாணவிகள் 4 பேரை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பேருந்தில் கடத்தி சென்றதால், மாணவிகளின் பெற்றோர் மங்கலமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மங்கலமேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை மகள் நிஷா (10). அதே பகுதியை சேர்ந்த விஷாலி (10), செந்தில் மகள் காவியா (10), ஆனந்தராஜ் மகள் ராஜேஸ்வரி (10). இந்த மாணவிகள் அனைவரும், அந்த கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை, அவர்களது பள்ளி முன்புறம் உள்ள மைதானத்தில் மாணவிகள் அனைவரும் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், அந்த மாணவிகளிடையே சாக்லெட் உள்ளிட்ட இனிப்பு வகைகள் வாங்கி தருவதாகவும், சர்க்கஸ் அழைத்து செல்வதாகவும் கூறி, சென்னை வழித்தடத்தில் சென்ற பேருந்தில் அவர்களை அழைத்து சென்று விட்டார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், பள்ளி எதிரே விளையாடிய குழந்தைகள் அங்கு இல்லாததால் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்பட சுமார் 300க்கும் மேற்பட்டோர் மங்கலமேடு காவல் நிலையத்தை தங்கள் குழந்தைடகளை கண்டுபிடித்து தரக் கோரி முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவல் நிலையங்கள், ரோந்துப்பணி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, கடலூர் மாவட்டம், தொழுதூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய மாணவிகளில் ஒருவர் தொலைபேசியில் அவரது பெற்றோரிடம் தொடர்புகொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மங்கலமேடு போலீஸார் அங்கு சென்று பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த மாணவிகளை மீட்டு காவல் நிலையத்துக்கு மீட்டு வந்து, சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து, மங்கலமேடு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.