பெரம்பலூர்: பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் அருகே உள்ள காந்தி சிலை முன்பு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சார்பில் சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க சட்ட ஆலோசகர் இரா. ஸ்டாலின் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலர் எம். கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி வட்டச் செயலர் (பொ) எஸ்.பி.டி. ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் என்.எஸ். இளங்கோவன், தீண்டாமை ஒழிப்பு இயக்க நிர்வாகி பி. கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க மாநிலத் துணைத் தலைவர் எம். சின்னசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சாதிய மறுப்பு திருமணங்கள் செய்பவர்களை கொலை செய்யும் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயக்க வேண்டும். சாதி மறிப்பு திருமணம் செய்வோருக்கு சலுகைகள், பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதோடு, திருமண உதவித்தொகையைக ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும். சாதி மறுப்பு திருமண தம்பதிகளின் பாதுகாப்புக்கு இல்லங்கள் உருவாக்குவதோடு, மாவட்ட சமூக நலத்துறை மூலம் சாதி மறுப்பு திருமணங்கள் குறித்து ஆய்வு செய்து உரிய உதவிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் வீ. ஞானசேகரன், மதிமுக மாவட்டச் செயலர் செ. துரைராஜ், சட்ட ஆலோசகர் பி. காமராஜ், தீண்டாமை ஒழிப்பு இயக்க மாவட்டத் தலைவர் என். செல்லதுரை, திராவிட கழக மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.