பெரம்பலூர் : பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பில் சாரண ஆசிரிய, ஆசிரியைகளுக்கான கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், மாவட்டச் சாரண இயக்க முதன்மை ஆணையருமான க. முனுசாமி பேசியதாவது :
அனைத்துப் பள்ளிகளிலும் சாரணர் இயக்கம் சிறப்பாகச் செயல்பட வேண்டும். மாணவர்களுக்குச் சாரண இயக்கச் செயல்பாடுகள் மூலமாக சிறந்த ஒழுக்கங்களையும், சேவை மனப்பான்மையையும் உருவாக்க வேண்டும்.
சாரண இயக்கம் செயல்படாத பள்ளிகளில், உடனடியாகப் படைகள் அமைக்கப்பட்டுப் பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளி ஆய்வின்போது சாரண இயக்கச் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும்,
பெரம்பலூர் மாவட்டச் செயலர் க. செல்வராசு 2015-16 ஆம் ஆண்டுக்கான செயல் திட்டங்கள் குறித்தும், திருச்சி மண்டல சாரணர் பயிற்சி ஆலோசகர் வி. வேணுகோபால் மண்டல அளவிலான பயிற்சிகள் குறித்தும் பேசினர்.
கூட்டத்தில், 2015- 16 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டம் வகுத்தல், ராஜ்யபுரஷ்கார் விருதுக்குச் சாரண, சாரணியரை ஆயத்தப்படுத்துதல், மாநில விருதுக்குத் தகுதியான ஆசிரிய, ஆசிரியைகளைத் தேர்வு செய்தல், குருளையர்களுக்கான சதுர்த்த சரண் விருதுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல், மாவட்டப் பயிற்சி மையம் பராமரிப்பு, பாரத சாரண, சாரணியர் அறக்கட்டளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) சி. ஜெயராமன் முன்னிலை வகித்தார்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) ரத்தினசாமி, சாரண ஆசிரியர் ஆறுமுகம் உள்பட பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த சாரண ஆசிரிய, ஆசிரியைகள் 85 பேர் கலந்துகொண்டனர். குரும்பலூர் பள்ளிச் சாரண ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.