பெரம்பலூரில் தினகரன் நிருபர் மற்றும் போட்டோ கிராபர் மீது தாக்குதலில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட ரவுடி கும்பல் கைது: சம்பவம் நிகழ்ந்த 24 மணி நேரத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை
பெரம்பலூர் : பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டு ரோஸ் நகரில் குடிநீர், சாலை வசதி, பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் நேற்று முன்னதினம் 26ந்தேதி செய்தி சேகரித்திட சென்ற தினகரன் நிருபர் வில்சன் மற்றும் போட்டோகிராபர் குணசேகரன் ஆகிய இருவரையும் அப்பகுதியை சேர்ந்த 8 பேர் கொண்ட ரவுடி கும்பல் சரமாரியாக தாக்கி, சட்டையை கிழித்து, கேமரா, மூன்று செல் போன்கள், இரண்டு ஏ.டி.எம்கார்டு, ஒரு பான் கார்டு ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தலைமமறைவானது.
இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான நிருபர் மற்றும் போட்டோகிராபரை சக செய்தியாளர்கள் மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதித்தனர். அதனைத்தொடர்ந்து அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற இருவரும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மேல்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான புகாரைத்தொடர்ந்து எஸ்பிசோனல்சந்திரா உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி விஜயபாஸ்கர், டிஎஸ்பிசெல்லபாண்டியன்,
மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் எஸ்.ஐ சுரேஷ், எஸ்.எஸ்.ஐ பெரியசாமி ஆகியோர் கொண்ட இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு
பெரம்பலூர் போலீசார் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ரவுடிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது பெரம்பலூர் ரோஸ் நகர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் மகன்கள்
மனோஜ்குமார்(26), விக்னேஷ்வரன்(25), கணேசன் மகன் சரண்குமார்(28), காமராஜ் மகன் ரமேஷ்(23), ஞானசேகரன் மகன் சர்மா(21), காமராஜ் மகன் வினோத்(25),
ராஜு மகன் கணேஷ்(20) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் ஏழு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கேமரா மற்றும் 3 செல்போன்கள்,
ஒரு பேன் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்து பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையிலடைத்தனர்.
சமூக அக்கறையோடு பொது மக்கள் பிரச்சினைக்காக செய்தி சேகரித்திட சென்ற நிருபர் மற்றும் போட்டோகிராபர் ரவுடி கும்பலால் கொலை வெறி தாக்குதலுக்குள்ளான சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட போலீசார் குற்றவாளிகளை பிடித்திட தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தது பாராட்டுக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.