ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர்.
பெரம்பலூர் : பெரம்பலூர், துறைமங்கலத்தில் உள்ள கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் மகாதேவன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர்கள் ஏ. ராஜா, கே. கருணாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. கருணாநிதி, உட்கோட்டத் தலைவர் க. தேவராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலர் க. மணிவேல், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பணி நீக்க காலத்தில் உயிரிழந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிமுறைகளைத் தளர்த்தி வாரிசுப்பணி வழங்க வேண்டும்.
சாலைப்பணியாளர்களுக்கு அரசாணைப்படி கருவூலம் மூலம் ஊதியம் அளிக்க வேண்டும். சாலை பராமரிப்பு பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலர் ச. இளங்கோவன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர் பி. தயாளன், ஓய்வூயர் சங்க மாவட்ட செயலர் ஆர். முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாவட்டப் பொருளாளர் சி. சுப்ரமணியன் நன்றி கூறினார்.