பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சாலை மையத் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் ஒருவர் இன்று மாலை உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள மேலமாத்தூரை சேர்ந்தவர் மருதமுத்து மகன் மாவீரன் (29). இவர், தனது குடும்பத்துடன் வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று மாலை பூவாயி (45) தனது மகன் மாவீரனுடன் இருசக்கர வாகனத்தில் பெரம்பலூருக்கு வந்துகொண்டிருந்தார்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு அருகே வந்தபோது, சாலையின் மையத் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பூவாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த பெரம்பலூர் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த மாவீரனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காகஅனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த பெரம்பலூர் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.