சாலை விபத்தில் கால்முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றவருக்கு சிகிச்சை அளிக்காத அரசு டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்ணக்கோணம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் பெரம்பலுார் ஆட்சியர் தரேஷ்அஹமதுவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 5ம் தேதி காலை 8.30 மணியளவில் லப்பைக்குடிக்காட்டிலிருந்து தொழுதுாருக்கு ஆட்டோவில் சென்றபோது ஆட்டோ புளியமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டேன். அங்கு எஸ்க்ரே மற்றும் சி.டி., ஸ்கேன் எடுக்கப்பட்டது.
அங்கு பணியாற்றி வரும் எனக்கு தெரிந்த டாக்டர் ஜாபர் என்பவர் எக்ஸ்ரேவை பார்த்துவிட்டு கால் முறிவு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். நான் மாலை 4 மணி வரை உள்நோயாளி இருந்தும் எலும்பு முறிவு டாக்டர்கள் யாரும் எனக்கு சிகிச்சை அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். எனவே அன்று பணியிலிருந்து எலும்பு மூட்டு டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.