பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பிரித்து, நிலமற்ற விவசாயிகளுக்கு தலா 3 ஏக்கர் நிலம் வழங்க வேண்டுமென விவயாச தொழிலாளர் சங்க பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூரில், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்க பெரம்பலூர் மாவட்ட பேரவைக் கூட்டம், மாவட்டப் பொறுப்பாளர் வீ. ஞானசேகரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டத் துணைச்செயலர் அ. ராசேந்திரன், மாவட்டச் செயலர் வீ. ஜெயராமன், மாவட்ட பொருளாளர் க. ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலத் தலைவர் எம். தங்கமணி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மாநில நிர்வாகக்குழு உறுப்பினருமான வை. சிவபுண்ணியம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.எஸ். சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க கையகப்படுத்தப்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக தரிசு நிலங்களாக பயனற்று கிடக்கும் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை, நிலமற்ற விவசாயத் தொழிலாள்களுக்கு தலா 3 ஏக்கர் வீதம் வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்திய முழுவதும் குடியிருக்க வீட்டுமனை இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு ாந்தோபாத்தியா குழு பரிந்துரைப்படி தலா 15 செண்ட் நிலம் வழங்கி, வீடு கட்ட ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நீர் நிலை.கள் மற்றும் நீர்வரத்துப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வெள்ளாற்றுப் பகுதியிலிருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை, கீழக்குடிகாடு அருகேயுள்ள ஏரிகளுக்கு செல்லும் வகையில் வெள்ளாற்றில் தடுப்பணை கட்டி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாராத நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் மற்றும் உதவி பணியாளர்களை நியமனம் செய்து தரமான சிகிச்சையும், அனைத்து வகையான மருந்துகளும் கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, மாவட்டத் தலைவராக பி. பாலகிருஷ்ணன், செயலராக ஆர். தனராசு, துணைத்தலைவராக ஏ. உதயக்குமார், துணைச் செயலராக பி. பாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தக் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆர். ராமராஜ், ந.கோ. கலைச்செல்வன், மாதர் சம்மேளன மாவட்டச் செயலர் எஸ்.ஆர். மகேஸ்வரி, அ. உதயக்குமார், கே. பழனிச்சாமி, கே. ராஜேந்திரன், சி. அழகுராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சங்க நிர்வாகிகள் ஆர். தனராசு வரவேற்றார். பி. பாலகிருஷ்ணன் மன்றி கூறினார்.