சீமைக் கருவேல மரங்களை அகற்றி முன்னெச்சரிக்கையாக தூர்வாரியதால் 3 குளங்களில் நீர் பெருகியது – 2 குளங்கள் நிரம்பியது : குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் குமரன் தகவல் தெரவித்துள்ளார்.
பெரம்பலூர் : வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி மழைநீரினை சேகரிக்கும் பொருட்டும், நிலத்தடி நீரினை மேம்படுத்திடவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், மழைநீரை சேமிப்பதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குரும்பலூர் பேரூராட்சி மூலம் கடந்த 19.09.2015 அன்று நீர்நிலைகளில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல் மரங்கள் அனைத்தும் பொதுமக்களின் பங்களிப்போடு, பேரூராட்சி பணியாளர்களுடன் சீமைக்கருவேல் மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு, குளத்தின் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது.
இது, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றதால், பெரும்பாலான பொதுமக்களும் தங்களை இப்பணியில் இணைத்துக்கொண்டனர். இதனால் குரும்பலூர் பேரூராட்சியில் 27.09.2015 இரவு பெய்த கன மழையின் காரணமாக, பேரூராட்சிக்குட்பட்ட 114 மீ நீளம், 92 மீ அகலம், 4 மீ உயரம் கொண்ட தெப்பகுளத்தில் சுமார் 2.5 மீட்டர் உயரத்திலும, 68 மீ நீளம், 60 மீ அகலம், 2.5 மீ உயரமும் கொண்ட மருதையான் குளத்தில் சுமார் 2 மீட்டர் உயரத்திலும் மழைநீர் தேங்கியுள்ளது.
மேலும் 8-வது வார்டு குப்பு ரெட்டியார் குளம் மற்றும் 3-வது வார்டு ஆண்டியான் குளங்கள் மழைநீர் நிரம்பிய நிலையிலும் உள்ளது. மேற்கூறிய அனைத்து குளங்களிலும் சுமார் 120 மில்லியன் லிட்டர் அளவிற்கு மழைநீர் அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரவும் வழிவகை உள்ளது, என குரும்பலூர் செயல் அலுவலர் குமரன் தெரிவித்துள்ளார்.