பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 10.08.2015 முதல் வட்டாரத்திற்கு 20 களப்பணியாளர்கள் வீதம் 4 வட்டாரத்தில் 80 களப்பணியாளர்களை நியமித்து முற்றிலும் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப்பணியில் ஈடுபட்டு வருகிகின்றனர். அவர்கள் வீடுகள் தோறும் சென்று கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களான, தொட்டிகள், பானை, உரல் மற்றும் டயா; போன்றவைகளில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களை கண்டறிந்து கொசுப்புழுக்களை அழித்துவருகின்றனர், அதேபோல் பேரூராட்சிகளிலும் இதே பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பெரம்பலூர் நகராட்சியில் சிறப்பு கொசுப்புழு ஒழிப்பு பணிகளாக பெரம்பலூர் நகராட்சி முழுவதும் 09.10.2015 முதல் 17.10.2015 வரை 8 நாட்களில் 60 களப்பணியாளர்களை கொண்டு அனைத்து வீடுகளிலும் மழை நீர் தேங்கி உள்ள இடங்களை கண்டறிந்து அவற்றை அப்புறப்படுத்தியும் வீடுகளில் உள்ள உரல், டயர், பிரிட்ஜ் பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கியுள்ள ஏடிஸ் கொசுப்புழுக்களை அழித்து வருகின்றனர், இந்தப்பணியின் நிறைவு நாளான இன்று 17.10.2015 பெரம்பலூர் நகரில் டயர்களை சேர்த்து
வைத்துள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, சுமார் 300 டயர்கள் அப்புறப்படுத்தப்பட்டன. பொதுமக்களும் தங்களின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
எனவே, பொது மக்கள் தற்பொழுது மழைக்காலமாக இருப்பதால் தங்கள் வீடுகளில் தண்ணீர் தேங்கமால் பார்த்துக் கொள்ளவேண்டும், தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும், மூடி இல்லையெனில் துணிகளை கொண்டு வேடு கட்ட வேண்டும் இவ்வாறு செய்வதால் கொசுக்கள் தண்ணீரில் உட்கார்ந்து முட்டை இடாமல் இருக்கும். தொட்டிகளை மூன்று நாட்களுக்கு ஒருமுறை பிளிச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், என கேட்டுக்கொள்ளப்படுகிறது, தண்ணீரை கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நகராட்சிப் பகுதிகளில் தினந்தோறும் ஒவ்வொரு பகுதியாக கொசுமருந்து அடிக்கப்பட்டு வருகிறது. நோய்பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகாதவாறு பொதுமக்களும் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டுமென, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.