பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க சாத்தனூர் தேசிய கல்மரப் பூங்காவினை சுற்றுலாத்துறை மற்றும் இந்திய புவியியல் துறை அலுவலர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
கல்மரப் பூங்காவில் தற்போது இருக்கின்ற நுழைவு வாயில் கல்மரத்தின் அடிப்பகுதியினை மறைத்தவாறு அமைக்கப்பட்டுள்ளது அதனை சிறிது தூரம் தள்ளி அமைக்கவும், கல்மரத்தினை சுற்றி இரும்பு கம்பிகளினால் ஆன தடுப்பு வேலி அமைக்கவும், கல்மரத்திற்கு எதிர் புறம் சுற்றுலாத்துறை நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியக கட்டிடத்தில் காட்சி பொருட்களை நிரப்பி பல்துறை அருங்காட்சியகமாக அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக இந்திய புவியியல் துறை துணை இயக்குநர் ஜெனரல் இராஜூ தெரிவித்தார்.
பெரம்பலூரின் ஒரு சிலப் பகுதிகள் பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்தாகவும் பின்னர் நிலப்பரப்பாக மாறியதால் கடலில் வாழ்ந்த உயிரினங்களின் படிமங்கள் இந்த பகுதி முழுமைக்கும் கிடைக்கப் பெறுகிறது. எனவே இந்த பகுதி கடலாக இருந்தமைக்கு சாத்தனூர் கல்மரம் மற்றும் கொளக்காநத்தம் நத்தை படிமம் ஆகியவைகள் சிறந்த சாட்சிகளாக அமைகிறது என்று இந்திய புவியியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வு முடிந்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவுடன் கலந்தாலோசனனை செய்த பின்னர் இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்திய புவியல் துறை துணை இயக்குநர் ஜெனரல் இராஜு தெரிவித்தார்.
ஆய்வின் போது கண்காணிப்பு புவியியல் வல்லுனர் நாகேந்திரன், புவியியல் ஆராய்ச்சி உதவியாளர் இசக்கி முத்து, சுற்றுலாஅலுவலர் தமிழரசி மற்றும் உதவி சுற்றுலா அலுவலர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.