பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தில் ஸ்ரீமகாமாரியம்மன் கோயில் தேரோட்ட விழா இன்று வெகுவிமர்சையாக நடந்தது.
செங்குணத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் திருத்தேர்விழாவையொட்டி கடநத் 2ம்தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது. இதை தொடர்ந்து கடந்த 9ம்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 19ம்தேதி முதல் 14ம்தேதி வரை அன்னம், மயில், சிம்மம் போன்ற பல்வேறு வாகனத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் தினமும் மண்டல அபிஷேகமும் நடந்தது. 14ம்தேதி மாவிளக்கு பூஜையும், பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி , அலகு குத்துதல், பூ மித்தல் போன்ற நிகழ்ச்சிகளும், 15ம்தேதி பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம்,வெட்டுக்குதிரையில் அம்மன் புறப்பாடும் நடந்தது.
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்ட விழா இன்று 16ம்தேதி காலை 10 மணியளவில் நடந்தது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து நிலை நின்றது. இதில் செங்குணம் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நாளை 17ம்தேதி மஞ்சள் நீருடன் விழா நிறைவு பெறுகிறது.