பெரம்பலூர் : செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தில் இன்று திறந்த முறை ஏலம் நடத்தப்பட்டது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் திறந்தமுறை ஏலம் நடத்தப்பட்டது. இதில் சத்திரமனை, அம்மாபாளையம, இரூர், செட்டிகுளம், நாட்டார்மங்கலம், பொம்மனப்பாடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 30 விவசாயிகள் தங்களது சின்ன வெங்காயத்தினை திறந்தமுறை ஏலத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.
செட்டிகுளம், குரூர், சீதேவிமங்கலம், சத்திரமனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 வியாபாரிகள் 90 மூட்டை (5,075 கிலோ) சின்ன வெங்காயத்தினை ஏலத்தில் எடுத்தனர். இன்றைய தினம் சின்ன வெங்காயம் புதியது அதிகபட்சம் கிலோ ரூ.34.00 க்கும் விதை வெங்காயம் அதிகபட்சமாக கிலோ ரூ.44.00க்கும் சராசரியாக ஒரு கிலோ ரூ. 31.00-க்கும் விற்பனையானது. இதன்மூலம் ரூ.1,58,814க்கு விற்பனை நடைபெற்றது. அனைத்து விவசாயிகளுக்கும், உடனடியாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.
இவ்வணிக வளாகத்தில் வாரந்தோறும் செவ்வாய், மற்றும் வியாழன் கிழமைகளில் திறந்த முறை ஏலம் நடைபெற்று வருகிறது. எனவே விவசாயிகள் தங்களது வெங்காய விளை பொருளை நன்கு சுத்தப்படுத்தி , தரம் பிரித்து (01.10.15) வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணிக்குள் கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது கேட்டுக் கொண்டுள்ளார்.