சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் வகையில் இரண்டாம் கட்டமாக 126 துப்புரவு பணியாளர்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது சென்னைக்கு வழியனுப்பி வைத்தார்.
தொடர்ந்து பெய்த பெருமழையினால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நிவாரணப் பணிகளையும், சுகாதாரப்பணிகளையும், துப்புரவு பணிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில் சென்னையில் அதிக அளவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள கழிவுகளை அப்புறப்படுத்த பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் துப்புரவு பணியாளர;கள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளிலிருந்து 314 துப்புரவு பணியாளர்கள் 7.12.2015 மற்றும் 8.12.2015 ஆகிய நாட்களில் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களின் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பான முறையில் துப்புரவு பணிகளை மேற்கொண்டு முடித்து கடந்த 13.12.2015 ஞாயிற்றுக்கிழமையன்று பெரம்பலூர் திரும்பினர்.
மேலும், சேதங்களை கணக்கிடும் வகையில் துணை ஆட்சியர் தலைமையில் வட்டாட்சியர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் என 91 நபர்கள் கடந்த 7.12.2015 அன்று சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகளை முடித்தவர்கள் இன்று பெரம்பலூர் திரும்புகிறார்கள். மீதமுள்ளவர்கள் தங்கள் பகுதிகளில் முழுமையாக கணக்கெடுப்பு பணி முடிந்தபிறகு பெரம்பலூர் திரும்புவார்கள்.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 126 துப்புரவு பணியாளர்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது இன்று சென்னைக்கு வழி அனுப்பி வைத்தார்.
சென்னைக்கு நிவாரணப்பணிகளுக்குச் செல்லும் பணியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேசும்போது தெரிவித்தாவது:
தொடரந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, தாம்பரம், முடிச்சூர், திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட் பல்வேறு பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களது உடைமைகளை இழந்துவாடும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்பேரில் தமிழக அரசு அனைத்துத்துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து பல்வேறு நிவாரணப்பணிகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் நமது மாவட்டத்திலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீங்கள் பணியாற்ற செல்கிறீர்கள். இக்கட்டான சூழ்நிலையில் உள்ள மக்களுக்காக பணியாற்ற கிடைத்த வாய்ப்பாக இதை நீங்கள் கருதி பணியாற்றவேண்டும். எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணியிலிருந்து பின்வாங்காத வகையில் மனிதநேயத்துடன் பணியாற்றவேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் து.ஜெயக்குமார், கவுல்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆலயமணி (பெரம்பலூர்), செந்தில் (வேப்பந்தட்டை) உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.