பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தில் பிறந்த குழந்தை முதல் 6 வயதுத்திற்குப்பட்ட இளம் சிறார்களுக்கு ஆரம்ப நிலையில் செவித்திறன் குறைபாட்டினை கண்டறிந்து மறுவாழ்வு அளிக்கும் ஆரம்பகால பரிசோதனை மையத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது இன்று பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தாவது:
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் ஓவ்வொரு வாரமும் திங்கள், புதன், சனி ஆகிய மூன்று நாட்களில் (திங்கள், புதன் நாட்களில் அனைத்து பிரிவினருக்கும,; சனிக்கிழமை தோறும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும்) காது, மூக்கு, தொண்டை மருத்துவரால் பரிசோதனை செய்து பிறந்த குழநதை முதல் 6 வயது வரை உள்ள முழுவதும் காது கேட்கும் திறனற்ற இளம் சிறார்களுக்கு தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பிட்டு திட்டம் மூலம் ரூ.12 லட்சம் மதிப்பில் உட்செவித் திறன் கருவி (காக்கிளியர் இம்பிளான்டேசன்) அறுவை சிகிச்சை மற்றும் காது கேட்கும் திறன் குறைவாக உள்ள நபர்களுக்கு ரூ.12,000 மதிப்பில் காதொலி கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியுடைய நபர்களுக்கு இலவச தேசிய அடையாள அட்டையும், மாதாந்திர உதவித் தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செவித்திறன் குறையுடைய பிறந்தது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு உட்செவி ஒலி மூளைதண்டு நரம்பியல் வினை ஆற்றல் பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் இது நாள் வரையில் சென்னையில் உள்ள மருத்துவமனையில் செய்யப்பட்டு வந்தது.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்பகால பரிசோதனை மையத்திலேயே பிறந்தது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு இருக்கிறதா என்பதை கண்டறியவும், உட்செவி ஒலி மூளைதண்டு நரம்பியல் வினை ஆற்றல் பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் பிறந்தது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கும், அனைத்து வயதினருக்கு செவித்திறன் குறைபாட்டிற்கான பரிசோதனைகளும் இலவசமாக செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, பிறந்தது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆரம்ப கால பரிசோதனை மையத்திற்கு அழைத்து வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய மருத்துவப்பணிகளுக்கான இணை இயக்குநரை 9444982674 என்ற எண்ணிலோ அல்லது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை 9042521640 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் மரு.உதயகுமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தஇராமகிருஷ்ணன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் ரமேஷ், சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.