பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் பயிர்கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் ஜுலை 1 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர்(பொ) ப. மதுசூதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பயிர்கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் ஜுலை 1 முதல் 21 ஆம் தேதி வரை வருவாய் கிராமங்கள் வாரியாக சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேலும், 2015- 2016 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட பயிர் வாரியான கடன் அளவு அடிப்படையில் பயிர்க்கடன் வழங்கப்படும். இதுவரை பயிர்க்கடன் பெறாத விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதற்கு முன் பயிர்க்கடன் பெற்றிருந்தால், அந்த கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தியிருக்க வேண்டும்.
எனவே, பயிர்க்கடன் பெற விரும்பும் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் அண்மையில் பெற்ற கணினி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலிருந்து பெறப்பட்ட தடையின்மை சான்று, தங்களது சேவை வங்கியில் சேமிப்பு கணக்கு இருந்தால் சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், பாஸ்போட் அளவு புகைப்படம் 2 மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அட்டை, ஆதார் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை, இரண்டு நகல்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட சான்றுகள் எளிதில் பெற வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் முகாமில் பங்கேற்க உள்ளனர்.
ஜூலை 1 ஆம் தேதி பெரம்பலூர் வட்டம் எசனை, அலங்கிழி, குரும்பலூர் (தெ), குன்னம் வட்டம் நன்னை (கி), சு.ஆடுதுறை, ஓலைப்பாடி (கி), ஆலத்தூர் வட்டம் மேலமாத்தூர், நாரணமங்கலம், வரகுபாடி, வேப்பந்தட்டை வட்டம் உடும்பியம், வாலிகண்டாபுரம், நூத்தப்பூர் (வ) ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளது.
2 ஆம் தேதி பெரம்பலூர் வட்டம் கீழக்கரை, குரும்பலூர் (வ), குன்னம் வட்டம் நன்னை (மே), பென்னகோணம் (வ), ஓலைப்பாடி (மே), ஆலத்தூர் வட்டம் அழகிரிபாளையம், நாட்டார்மங்கலம், காரை (கி), வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி (கி), நூத்தப்பூர் (தெ), பிரம்மதேசம் ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற உள்ளது.
3 ஆம் தேதி பெரம்பலூர் வட்டம் சத்திரமனை, அயிலூர், குன்னம் வட்டம் பெருமத்தூர் (வ), பென்னகோணம் (தெ), பரவாய் (மே), ஆலத்தூர் வட்டம் தொண்டபாடி, செ.மாவிலங்கை, காரை (மே), வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி (மே), பசும்பலூர் (வ), அனுக்கூர் ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என அதில் தெரிவித்துள்ளார்.