பெரம்பலூர் : ஜெயங்கொண்டத்தில் கார் உரிமையாளருக்கு ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு, தனியார் வாகன காப்பீட்டு தனியார் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவிட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகன் ஹூமாயூன் (வயது38). இவர் சொந்தமாக டாக்சி கார் ஓட்டி வருகிறாh;.
இவரது காரை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை தலைமை இடமாக கொண்டு இயங்கிவரும் வாகன காப்பீட்டு நிறுவனத்தின்
கும்பகோணத்தில் உள்ள அலுவலகம் வாயிலாக காப்பீடு எடுத்து அதற்கு உரிய காப்பீட்டு தொகையை பெரம்பலூர் கிளை அலுவலகத்தில் செலுத்தி பாலிசி எடுத்திருந்தார். இந்த பாலிசி 1.3.2013 முதல் 28.2.2014 வரை அமலில் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 30.8.2013 அன்று ஹூமாயூன், தனது காரை தத்துவாச்சேரியை அடுத்த பட்டம் என்ற பகுதியில் ஓட்டிச் சென்றபோது முன்புறம் சென்ற வாகனம் திடீரென்று பிரேக் போட்டதால் அந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஹூமாயூன் கார் நொறுங்கியது. இந்தவிபத்தில் தனது காரை பழுதுநீக்குவதற்கு உரிய காப்பீட்டுத்தொகையை அனுமதிக்குமாறு வாகன காப்பீடு செய்யும் நிறுவனத்தின் ஜெய்பூர் தலைமை அலுவலகம் மற்றும் கும்பகோணம், பெரம்பலூர் அலுவலகங்களுக்கு ஹூமாயூன் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் ஹூமாயூன் தவறான தகவலை தந்து நோ கிளைம் போனஸ் பெற்றதாக தனியார் காப்பீட்டு நிறுவனம், காருக்கு உரிய காப்பீட்டு தொகையை வழங்க அனுமதிக்க மறுத்தது.
ஆனால், ஹூமாயூன் விபத்தில் சேதம் அடைந்த தனது காரை திருச்சியில் உள்ள பணிமனையில் பழுது நீக்கும் பணி ரூ.1 லட்சத்து 5ஆயிரம் செலவு செய்து பழுதுநீக்கம் செய்தார். உரிய காப்பீட்டு தொகையை தனியார் நிறுவனம் வழங்காததால் மனஉளைச்சல் அடைந்த ஹூமாயூன் தனியார், வாகன காப்பீட்டு நிறுவனம் மீது 2014-ல் அன்று பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் கலியமூர்த்தி, உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். வழக்கு நிறைவில் மனுதாரர் ஹூமாயூனுக்கு ரூ.1லட்சத்து 5ஆயிரம் பழுதுநீக்கத் தொகையும், வாகன காப்பீடு செய்த தனியார் நிறுவனத்தின் சேவைகுறைபாடு மற்றும் ஹூமாயூனை மனஉளைச்சல், சிரமத்திற்கு ஆளாக்கியமைக்காக ரூ.20ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.5ஆயிரமும் வழங்கவேண்டும் என்று தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்திரவிட்டது.
விபத்துக்குள்ளான காருக்கு ஹூமாயூன் பழுது நீக்கத்திற்காக செலவிட்ட தொகை ரூ.1 லட்சத்து 5ஆயிரத்தை 1.10.2013 முதல் 9 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வாகன காப்பீட்டு நிறுவனம் 2 மாதத்திற்குள் வழங்கவேண்டும் என்று அந்த உத்திரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.